தேர்தல் புறக்கணிப்பே தமிழினத்துக்குப் பலம்!
தேர்தல் புறக்கணிப்பே தமிழினத்துக்குப் பலம்!

முன்னணி அறிக்கையூடாக தெரிவிப்பு


ஒற்றையாட்சி அரசமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசமைப்பு கொண்டுவரப்படல் வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் தமிழர் ஒற்றுமையாக நிறைவேற்றப்போகும் இந்த அரச தலைவர் தேர்தல் புறக்கணிப்பினூடாக அரசியல் ரீதியாகவும் இராஜதந்திரரீதியாகவும் ஏற்படுத்தப்படப்போகும் அழுத்தமானது தமிழினத்துக்கே மிகப்பெரிய பலத்தை வழங்கும் என்ற உண்மையை விளங்கிக் கொண்டு செயற்படவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிக்கையூடாக தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புறக்கணிப்பும் பின்னணியும் : 

தமிழர் தேசத்தில் இன்றும் சிங்கள பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், ஊடாக கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் தமிழர் தேசத்தைச் சிறிலங்கா அரசு எதிரி தேசமாகவே கருதி செயற்பட்டுவருகின்றது. ஒற்றையாட்சி அரச கட்டமைப்பினுள் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் தமது கைகளில் இருக்கும்வரை தமிழர்களால் அரசுக்கு எந்தவொரு நெருக்கடியையும் ஏற்படுத்த முடியாதெனக் கருதும் சிறிலங்கா அரசு தமிழ் மக்களைத் தனது மக்களாகக் கருதாமல் எதிரிகளாகக் கருதி சிங்கள தேசத்தின் நலன்களை மட்டுமே பேணிச் செயற்பட்டுவருகின்றது. அவ்வாறான அரச தலைமைத்துவத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற காத்திரமான செய்தி வெளிப்படுத்தப்பட வேண்டுமாயின் அரச தலைவர் தேர்தலை நிராகரிப்பதே தமிழ் மக்களுக்குள்ள ஒரே தெரிவாகும். இதன்மூலம் தமிழர்களுடன் கட்டாயமாகச் சமரசத்துக்கு வரவேண்டிய அரசியல், இராஜதந்திர நெருக்கடிகளை அரசுக்கு ஏற்படுத்த முடியும்.   

பொருளாதார வீழ்ச்சியும் இனப்பிரச்சினையும் :

தமிழ் மக்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள், அதியுச்சப் பலத்திலிருந்த காலத்தில் சிறிலங்கா அரசு சந்தித்த பொருளாதார வீழ்ச்சியை விடவும் தற்போது சிறிலங்காவின் பொருளாதாரம் பன்மடங்கு அடிமட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 


இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப்பெரியதொரு வீழ்ச்சியை ஏற்படுத்துகின்ற போதுதான், சிறிலங்கா இனவாத அரசு தமிழ்மக்களின் கோரிக்கைகளை கருத்திலெடுக்கும் என்பதாலேயே 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிறிலங்காவின் பொருளாதார இலக்குகளைக் குறிவைத்து அதன் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதனால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலேயே அரசு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு உடன்பட்டிருந்தது.  

போர் முடிவுக்கு வந்த பின்னருங்கூட 75 ஆண்டுகளாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.  தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் தீவிரமடைந்து வருகின்றன. அவ்வொடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் தமிழர்கள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர். இதனால்  குறைக்கமுடியாமல் காணப்படும் அதிகரித்த பாதுகாப்புச் செலவினம், இனவாதத்தை மூலதனமாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆட்சியாளர்களின் ஊழல், பிராந்திய மற்றும் பூகோள ஆதிக்கப் போட்டி என்பவை நாட்டின் பொருளாதாரத்தை அடிமட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளன. 


மகாவம்ச புனைவுக்குள்  சிங்கள மக்கள் மூழ்கியிருப்பதனால் இனவாதத்தை மூலதனமாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்களை சிங்கள மக்களால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.
 
இலங்கையின் ஒட்டுமொத்த அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும் ஊதியத்தில் 48 சதவீதமான கொடுப்பனவுகள் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடுவோருக்கே வழங்கப்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் சுமையாக உள்ளது.  இந்நிலையில் பாதுகாப்புத் துறைக்கு வருடாந்தம் ஒதுக்குகின்ற நிதியைக் குறைத்தேயாக வேண்டுமென பன்னாட்டு நாணய நிதியமும் வலியுறுத்திவருகின்றது. 


ஆனால் சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாத நிலையில் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் கொதித்தெழும் போதெல்லாம் ஆயுதப்படைகளையும் சிறிலங்கா பொலிஸாரையும் பயன்படுத்தியே தமிழ் மக்களை அடக்குகிறார்கள். இந்த அணுகுமுறை தொடரும்வரை பாதுகாப்புச் செலவினத்தை ஒருபோதும் குறைக்கவே முடியாது என்பதுடன் அதனை அதிகரித்தே செல்லவேண்டியிருக்கும்.

ஓர் அரசின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதனூடாகவும், ஏற்றுமதியை அதிகரிப்பதனூடாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். உற்பத்தியையும் ஏற்றுமதியையும்  மேம்படுத்தாமல் பொருளாதாரத்தில் நிலைத்து நிற்கக்கூடிய முன்னேற்றத்தை எந்த வகையிலும் உறுதிப்படுத்த  முடியாது. நாட்டின் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டுமாயின் வெளிநாட்டவர்களின் முதலீடுகள் அவசியமானதாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ளவதற்கு முன்னர் நாட்டின் உறுதிப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துவர்.  எதிர்காலத்தில் குழப்பம் வரக் கூடியதொரு நாடாக சிறிலங்கா நோக்கப்படுகின்ற  நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யப் பின்னடிக்கின்றார்கள். அந்த நிலையை மாற்றி வெளிநாட்டு முலீட்டாளர்களது மூதலீடு செய்வதற்கான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டுமாயின் பொருளாதார உறுதித்தன்மை ஏற்படுத்தப்படல் வேண்டும். அதனை ஏற்படுத்துவதற்கு இனப்பிரச்சினையைத் தீர்த்தே ஆக்வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும்.     


இவ்வாறானதொரு சூழலில் இலங்கையில் 75 வருடங்களாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு இரண்டு வழிமுறைகளே உள்ளன.

1.    தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளைக் கைவிடச் செய்து, பேரினவாத்துக்கு அடிமையாக வாழ்வதற்குத் தயாராக்குவது.  அல்லது

2.    தமிழ் மக்களது அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் நேர்மையாகச் செயற்பட்டு தமிழர் தேசத்தின் நிரந்தர இருப்பைப் பாதுகாக்கக்கூடிய தீர்வு நிலைப்பாடுகளை முன்வைத்து - சிறிலங்கா அரசுடன் பேரம்பேசல்களைச் செய்து தீர்வைப் பெற்றுக் கொடுப்பது. 
என்பனவாகும்.

இனவழிப்பு மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளது போராட்டம் மௌனிக்கப்பட்ட நாளிலிருந்து மேற்சொன்ன முதலாவது வழிமுறையை சிறீலங்கா அரசு கையிலெடுத்தது. அந்த முயற்சிகள் அனைத்துக்கும் பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளும் - 2009 ற்குப் பின்னர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வடக்குக் கிழக்குப் பிரதிநிதிகளும் கூட்டிணைந்து முழுமையான ஆதரவு வழங்கிச் செயற்பட்டிருந்தார்கள். இனப்படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத்தினரை பன்னாட்டுக் குற்றவியல் விசாரணைகளில் சிக்கவிடாமல் பாதுகாத்தவாறு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியவாறு - கைதுகள் சித்திரவதைகளை தொடர்ந்தபோதும், சிறிலங்கா அரசின் இனவழிப்பு போரால் பேரழிவுகளைச் சந்தித்த தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளினர். தமிழ் மக்களுக்குள் சோர்வு மனப்பான்மையை அதிகரிக்கச்செய்து - தாங்களாகவே உரிமைகளைக் கைவிடுவதற்குரிய சூழமைவுகளை உருவாக்கி - அடிமைத்தனமான ஒரு அரசியல் கலாசாரத்துக்குப் பழக்கப்படுத்துவதன் மூலம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை ஏற்று - அதற்கு அடிபணிந்து வாழும் நிலையை உருவாக்கும் முயற்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவந்தது. எனினும் அத்தகைய சதிமுயற்சிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் அவ்வப்போது அம்பலப்படுத்தி வந்தமையால் தமிழ்த் தேசியக் கொள்கையுடன் பயணிக்கும் எமது மக்களதும் - முன்னாள் போராளிகளதும் - புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களதும் ஒத்துழைப்புடன் சதிகளை முறியடித்து, எம் மக்களைத் தோல்வி மனப்பான்மையிலிருந்து ஓரளவுக்கேனும் மீட்டெடுத்து, இலட்சிய உறுதியுடன் போராடச் செய்யும் வரலாற்றுக் கடமையை  எமது அரசியல் இயக்கமே முன்னகர்த்திவந்தது என்பதுடன் இன்றும் அதே வழியில் பயணித்துவருகின்றது. 
      
தமிழ் மக்களின் அரசியல் தீர்;வும் நேர்மையான பேரம்பேசல்களும் : 

இனவாதிகளது ஊழல், பூகோள ஆதிக்கப்போட்டி, தமிழர்களது தொடர்போராட்டம் ஆகியவற்றால் ஏற்படும் நெருக்கடி நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழ் மக்களது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கும் சாதகமான சூழலை  ஏற்படுத்தும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் பேரம்பேசும் நிலைமையை ஏற்படுத்த வேண்டியது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய முக்கிய கடமையும் பொறுப்புமாகும். 

நேர்மையான பேரம் பேசல்கள் நடைபெற்றனவா?

போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களுக்குத் தங்கள் உரிமைகள் சார்ந்து முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் எத்தனையோ பேரம்பேசும் சந்தர்ப்பங்கள் அமைந்திருந்தன. அச்சந்தர்ப்பங்களை தமிழ் மக்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்கக்கூடிய வாய்ப்புக்கள், வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களிடம் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றிருந்த தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினருக்குக் கிடைத்திருந்தது. 

அவ்வாறாக சிறிலங்கா அரசுடன் பேரம்  பேசக்கூடிய  சந்தர்ப்பங்கள் ஏற்பட்டபோதெல்லாம், அந்தப் பேரம் பேசும் சூழல்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருந்தது. எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்களை முற்றாகப் புறந்தள்ளி, மக்களது எதிர்பார்ப்புக்களுக்கு நேரெதிராகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு செயற்பட்டிருந்தது. 

சிறிலங்காவில் ஆட்சிப் பீடம் ஏறியவர்கள் முற்றுமுழுதாகத் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாக இருந்தனர். அவர்களில் இந்திய மேற்குல நாடுகளுக்குச் சார்ந்து செயற்படும் ஆட்சியாளர்களைத் தமிழ் மக்களது மீட்பர்கள்போன்று சித்தரித்து - தமிழ் மக்களை ஏமாற்றி - அவ்வாறான அரசாங்கத்துக்கு தமிழ் மக்களது ஆதரவைத் திரட்டிக் கொடுத்திருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிப்பீடத்தில் ஏறிய இனவாத அரசின் கோரமுகத்தை மூடிமறைத்து, நிபந்தனைகள் எதுவுமின்றி ஆட்சியாளர்களுடன் இதயத்தால் இணைந்துள்ளதாகவும் எழுத்துமூலமான உடன்பாடுகள் தேவையில்லை என்றும் கூறி - நல்லாட்சி என்ற போர்வையைப் போர்த்தி - ஒடுக்குமுறையாளர்களையே தமிழ் மக்கள் விரும்பி ஆதரிக்கும் நிலையைத் தோற்றுவித்தார்கள். 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழர் நிராகரித்த சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு, ஒடுக்குமுறைச் சின்னமாகிய சிங்கக் கொடியை ஏந்திப்பிடித்தார்கள். ஐ.நா மனித உரிமைகள் பேரவை வரை சென்று பன்னாட்டு விசாரணையைத் தடுத்து, உள்ளக விசாரணைக்குள் முடக்கி இனப்படுகொலை செய்த ராஜபக்சேக்களையும் இராணுவத்தினரையும் குற்றவியல் விசாரணைகளிலிருந்து பாதுகாத்தார்கள். இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த  புதிய அரசமைப்பின் மூலம் நிரந்தர அரசியல்த் தீர்வு என்ற போர்வையில் ஏக்கியராச்சிய அரசமைப்பை மைத்திரி – ரணில் அரசுடன் இணைந்து உருவாக்கியதுடன் வடக்கு கிழக்கு இணைப்பை கைவிடுவதற்கும், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஸ்டிக் கோரிக்கையைக் கைவிடவும் சம்மதம் தெரிவித்தார்கள். தீர்வுக்கான தொடக்கப்புள்ளி என்னும் போர்வையில் 13ஆம் திருத்தைத்தையும் ஒற்றையாட்சியையும் ஏற்றுக் கொண்டார்கள். நாட்டின் பொருளாதாரம் கோத்தாபய தலைமையிலான ஆட்சியின்போது அதலபாதாளத்தில்  வீழ்ந்தது. அச்சந்தற்பத்தில் மக்களது ஆணையில்லாமலே அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். அவர்  இந்திய மேற்குலகின் நலன்களைப் பேணிச் செயற்படும நபர் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ் மக்களது நலன்களைப் பாதுகாக்கும் எந்தப் பேரம்பேசல்களோ நிபந்தனைகளோ இல்லாமல் 'நாடே முதன்மை என்ற கோசத்துடன், அரச தலைவர் ரணில் கூட்டிய அனைத்துக் கூட்டங்களிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தவிர்ந்த ஏனைய வடக்குக் கிழக்கைச் சேர்ந்த 16 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். அவ்வாறு கலந்து கொண்டதன் மூலம், தமிழ் தேசத்தின் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பை நிறுத்தாது தீவிரப்படுத்தியவாறே, பன்னாட்டு நிதி உதவிகளைத் திரட்டிக்கொள்வதில் ரணில் - ராஜபக்ச அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்தார்கள். அத்துடன் இனப்படுகொலையாளிகளான ஆயுதப்படைகளையும் அவர்களுக்குக் கட்டளைகளை வழங்கிய ராஜபக்சக்களையும் பன்னாட்டுக் குற்றவியில் விசாரணைகளிலிருந்தும் தொடர்ந்தும் பாதுகாத்துவருகின்றார்கள்.  
 
இவ்வாறு சோரம்போன தமிழ் அரசியல்  தரப்புக்களை நம்பி தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாறுவதென்பது, எமது அரசியல் அபிலாசைகளை நாமே கைவிடுவதற்கும் - சிறிலங்காவின் சிங்கள தேசத்துக்குள் தமிழ்த் தேசத்தை அடகுவைப்பதற்கும் - எதிர்கால தமிழ்ச் சந்ததிகளை அடிமைகளாக்குவதற்குமே வழிவகுக்கும். 

எனவே பிராந்திய, சர்வதேச வல்லரசுகளதும் மற்றும் சிறிலங்கா அரசினதும் முகவர்களாகச் செயற்படும் தமிழ் அரசியல் தரப்புக்களது பொய் வாக்குறுதிகளையும் பசப்பு வார்த்தைகளையும் நம்பி, இனியும் தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது.  

தமிழ் மக்களுக்கு சிறிலங்காவின் அரச இயந்திரத்தில் நம்பிக்கையில்லை என்பதையும் - இனவாத சிறிலங்கா அரசைத் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றார்கள் என்ற செய்தியையும் பட்டவர்தனமாக வெளிப்படுத்துவதன் ஊடாகவும் - தமிழ் மக்கள் தங்கள் உரிமை சார்ந்த பயணத்தில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையும் - சிறிலங்கா அரசின் மிகப்பெரிய அழுத்தங்கள் ஒடுக்குமுறைகள் தொடர்கின்றபோதும்கூட, தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்காக கொந்தளித்துக் கொண்டேயிருக்கின்றார்கள் என்பதையும் - தமிழ் மக்கள் அடக்குமுறைகளுக்கு அஞ்சி தங்கள் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்ற செய்தியையும் வெளிப்படுத்துவதற்குரிய ஒரேயொரு வழிமுறை சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதேயாகும்.
 
இந்த அரச தலைவர் தேர்தல் புறக்கணிப்பானது எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலத்திலுங்கூட பேரம்பேசலுக்கான ஒரு அணுகுமுறையாகப் பின்பற்றப்பட்டிருந்தது. இன்று ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலிலும்  - எமது மக்கள் தமது சுய முடிவின் அடிப்படையில் அரச தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவுக்கு வருகிறார்கள் என்பதும் - அரச தலைவர் தேர்தல் புறக்கணிப்பதன் மூலம், தமிழ் மக்கள் தமது அடக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான புரட்சிகர மனப்பான்மையை வெளிப்படுத்தும் நிலைக்குச் செல்கிறார்கள் என்பதும் சிறிலங்கா அரசுக்கு வழங்கும் காத்திரமான செய்தியாக அமையும். 

மேற்கூறிய நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான வேறுவழிகள் ஏதுமின்றி தமிழ்மக்களுடன் ஒரு சமரசத்துக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற நிலையை சிறிலங்கா அரசுக்கு ஏற்படுத்த வேண்டும். இத்தகையை நிலையை உருவாக்குவதற்கே தமிழ் மக்கள் செயலாற்ற வேண்டும். அதற்கு, ஜனநாயக முறையில் – வன்முறைகளுக்கு இடமளிக்காத வகையில் - அதேநேரம் மிக ஆழமான ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும்.
 
தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாதொழித்து, சிங்கள பௌத்த விரிவாக்கத்தை முன்னெடுக்கும் சிறிலங்கா அரச கட்டமைப்பைத் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர்; என்ற செய்தியையும் - தமிழ் மக்களுடைய உரிமைகள் அங்கீகரிக்கப்படாதவரைக்கும் - தமிழ் மக்களுக்கு நன்மை எதுவும் கிடைக்காத வரையில் - தமிழ்த் தேசத்தின் மீதான சிங்கள மயமாக்கலையும், பௌத்த மயமாக்கலையும் தீவிரப்படுத்திவரும் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்யும் தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற செய்தியை இலங்கை அரசுக்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கும் வழங்கவேண்டியது தமிழ் மக்களின் மிகமுக்கிய கடமையாகும்.

பேரினவாதக் கட்சிகளும் சிங்கள வேட்பாளர்களும் :

சிறிலங்காவில் எந்தவொரு அரச தலைவர் தேர்தலிலும் சிங்கள பௌத்த வேட்பாளர்களே வெற்றிபெறக் கூடிய நிலையில் - அவர்கள் தமது வெற்றிக்காக - சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சிங்கள பௌத்த மேலாதிககத்தை உறுதிப்படுத்தும் ஒற்றையாட்சி அரசமைப்பைப் பேணிப்பாதுகாத்தல் என்ற கொள்கையை முன்கொண்டு செல்வதில் 'யார் வல்லவர்' என்னும் போட்டியில் ஈடுபடுகின்றனர். பிரதான வேட்பாளர்களது இனவாதக் கொள்கை நிலைப்பாட்டை தமிழ்த் தரப்புக் கருத்திற் கொள்ளாமல், அந்த மூன்று 'வேட்பாளர்களுள் சிறந்தவர்களைத் தெரிதல்' என்ற மாயைக்குள் சிக்கி, தமிழர் நலன்களுக்கு எதிரான சிங்கள பௌத்த இனவாதக் கொள்கைக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் செல்கின்றமையானது, இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடாக இருப்பதை தமிழ் மக்கள் ஆணை வழங்கி அங்கீகரித்துள்ளார்கள் என்பதாகவும் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை நோக்கி நியாயமாக நடந்துகொள்கின்றார்கள் என்பதாகவும் உண்மைக்குப் புறம்பான செய்தியை மட்டுமே பன்னாட்டுச் சமூகத்துக்கு வெளிப்படுத்தும். இந்த ஆபத்து நிலைமையை தமிழ் மக்கள் மாற்றியமைக்காதவரை தமிழினம் அடக்குமுறைக்குள் தாமே சிக்கிக்கொள்வதாகவும் - அவற்றிலிருந்து மீண்டெழமுடியாத நிலைமையும் தொடரும். 

தமிழ்ப் பொதுவேட்பாளரும் பின்னணியும் : 

தேர்தல் புறக்கணிப்பு பொருத்தமற்றதெனவும், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்றும் சில தரப்புக்கள் கங்கணம்கட்டி நிற்கின்றார்கள். அவ்வாறு கூறுபவர்கள்,  தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை சிங்கள வேட்பாளர்களுக்கு வழங்கக் கூடாதென்றும் - தமிழ் மக்களது அரசியல் வேணவாவை பன்னாட்டுச் சமூகத்துக்கு வெளிப்படுத்துவதற்காகப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் கூறி மக்களை ஏமாற்ற முற்படுகின்றார்கள். தமிழ் மக்களது அபிலாசைகளைச் பன்னாட்டுச் சமூகத்துக்கு வெளிப்படுத்துவதற்காகவே பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டுமெனக் கூறுபவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் எவ்வாறு நடந்துகொண்டார்கள்? 

கடந்த 2010 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வு மற்றும் இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி என்ற நிலைப்பாட்டுக்கு ஆணை கோரிப் போட்டியிட்ட தரப்புக்கு ஆதரவாக, தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்து அறுதிப்பெரும்பான்மை ஆணையை வழங்கிப் 15 ஆசனங்களை வழங்கியிருந்தார்கள்.  அந்த ஆணைக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை நோக்கி தீர்வு விடயத்தில் இனநல்லிணக்கம் ஏற்பட மகிந்த ராஜபக்ச அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் தமிழ் மக்களது அபிலாசைகள் நிறைவு செய்யப்படும் என்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக விசாரணையையுமே வலியுறுத்தியிருந்தார்கள்.  கடந்த 2015ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக இனப்படுகொலைக்கு ஆதாரமில்லை என்றார்கள். ஐநா மனித உரிமைகள் பேரவையில் பொறுப்புக்கூறல் தொடர்பில் பன்னாட்டு விசாரணையைக் கைவிட்டு உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குச் பன்னாட்டு நீதி வேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையில் இலங்கை அரசுடன் இணைந்து காணாமல்போனோர் அலுவலகத்தை உருவாக்கி உள்ளகப் பொறிமுறைக்குள் முடக்கும் அரசின் கபட முயற்சிக்குத் துணைபோயிருந்தார்கள். இனப்பிரச்சினையைத் தீர்த்தல் என்ற போர்வையில் 'ஏக்கிய இராச்சிய' அரசமைப்பு வரைபை ரணில் - மைத்திரி அரசுடன் இணைந்து உருவாக்கி தமிழ் மக்களுக்கு வரலாற்றுத் துரோகமிழைத்தார்கள்.  

போர் காலத்தில் தமிழ் மக்கள் தமது வரலாற்று வாழ்விடங்களிலிருந்து வன்முறைகள் மூலம் பலாத்காரமாக சிறீலங்கா அரசால் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். ஆனாலும் போர் முடிவுக்குப் பின்னர் அந்த நிலங்களில் தமிழர்களை மீளக்குடியமர அனுமதி மறுக்கப்பட்டதுடன் அப்பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். அவ்வாறு குறியேற்றப்பட்ட சிங்களவர்களுக்;குக் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வுகளை அரசு முன்னெடுத்தபோது  அந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துகொண்டதன் மூலம் - திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் நிகழ்ச்சி நிரலை மூடிமறைப்பதற்கும், அது இயல்பான மீள்குடியேற்ற நடவடிக்கை அல்லது அபிவிருத்திச் செயற்பாடு என்றவாறான தோற்றப்பாட்டை அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் காண்பிக்கத் துணைபோனார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் - மைத்திரி  அரசாங்கத்தில் இதயத்தால் இணைந்திருந்த காலத்திலேயே - மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் மாதுறு ஓயா வலது கரை அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதேவேளை அங்கு முழுமையான சிங்கள பௌத்த மயமாக்கலை ஏற்படுத்தும்  நோக்கில் அந்த மேய்ச்சல் தரைப்பகுதியிலிருந்து தமிழ்ப் பண்ணையாளர்களை விரட்டியடித்து - மூன்று இலட்சம் கால்நடைகளை அழிவுக்குள் தள்ளி - சோளம் மற்றும் சிறுதானியப் பயிர்ச் செய்கையில் பெரும்பான்மையினத்தவர்களை அத்துமீறி ஈடுபடுத்தியபோதும் நல்லாட்சி என்ற பெயரில் ரணில் - மைத்திரி அரசுக்கு தொடர்ந்தும் முட்டுக்கொடுத்ததால் அப்பகுதியை ஆக்கிரமிக்கும் அரசின் செயற்பாட்டிற்குத் துணைபோயிருந்தார்கள். 

இனப்படுகொலையாளி கோத்தாபய ராஜபக்ச நிறைவேற்று அதிகார அரச தலைவராக பதவியிலிருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தை 15ஆம் நாள் 'ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டிருந்த பொறுப்புக்கூறல் விவகாரத்தை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த ஏதுவாக, ஐ.நா. செயலாளரை வலியுறுத்துமாறு கோரி' -  ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்குத் தமிழ்த் தரப்புக்களால் கூட்டாகக் கையொப்பமிட்டு கடிதம் எழுதப்பட்டது. அக்கடிதத்தை மறுதலிக்கும் விதமாக அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே எனத் தெரிவித்து, உள்ளக விசாரணையை வலியுறுத்தும்  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானம் எந்த வடிவத்திலேனும் நிறைவேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தி - பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக விசாரணைத்தீர்மானத்தை வலிந்து கோரியதன் மூலம்  தமிழ் மக்கள் கடந்த 2020 இல் நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கிய ஆணைக்கு எதிராகச் செயற்பட்டு இனப்படுகொலையாளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டார்கள்.

ஓற்றையாட்சி முறையும் இனப்பிரச்சினையும் : 

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் - ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களாக வாழ்வதற்குரிய – இறைமை, சுயநிர்ணய உரிமை கொண்ட சமஷ;டித் தீர்வே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையாகவும், புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான அரசியல்த் தீர்வாகவும் அமையமுடியும். 2009 இல் தமிழினவழிப்பு நடைபெற்றுள்ளதுடன், இன்றும் கட்டமைப்புசார் இனவழிப்பு செயற்பாடுகள் திட்டமிட்டு, வேண்டுமென்றே சிங்கள பௌத்த பேரினவாதத்தால் தொடர்ந்துவரும் நிலையில் - ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு முறைமையும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கருதமுடியாது.

ஆனால் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய எம்மைத் தவிர்ந்த ஏனைய அரசியல் தரப்புக்கள் - 1987 இல் தமிழ் மக்களால் நிராக்கப்பட்டிருந்த ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தத்தையே, பன்னாட்டுச் சமூகத்தின் மத்தியில் தமிழருக்கான தீர்வாக 2009 இன் பின்னர் வலியுறுத்தி வந்துள்ளதுடன், கடந்த 2022ஆம் ஆண்டு தை 18 ஆம் நாள் - இந்திய தலைமை அமைச்சர் மோடிக்கும், அந்த நிலைப்பாட்டையே வலியுறுத்தி எழுத்துமூலமான கடிதத்தை அனுப்பி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்குத் துரோகமிழைத்திருந்தார்கள். 

கடந்த காலங்களில் இவ்வாறு துரோகமிழைத்தவர்கள்;தான் மீண்டும் இன்று  தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறிவருகிறார்கள். தமிழ் பொது வேட்பாளர் என்ற பின்னணியின் உண்மையை உரசிப் பார்போமானால் - இரண்டாவது விருப்பு வாக்கை சிங்களப் பேரினவாத வேட்பாளர் ஒருவருக்கு செலுத்துவதற்காகவே தயார்ப்படுத்துகின்றார்கள். இந்த உண்மையை கிளிநொச்சியில் இடம்பெற்ற  மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தனது உரையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தார்.  இரண்டாவது வாக்கை சிங்கள வேட்பாளருக்கு வழங்குவதென்பதும் சிங்கள வேட்பாளர் ஒருவரை அரச தலைவர் தேர்தலில் நேரடியாக ஆதரிப்பதாகவே அமையும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படியாயின் - தொடர்ச்சியாக தேர்தல்களில் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணைகளுக்கு மாறாக, ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வையும் உள்ளக விசாரணையையும் வலியுறுத்திவரும் தமிழ்த் தரப்புக்கள் கூட்டிணைந்து தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துதற்கு மேற்கொள்ளும் முயற்சியானது உண்மையாகவே தமிழரின் அபிலாசைகளை வெளிப்படுத்த எடுக்கப்படும் முயற்சியா? அல்லது சிங்கள வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதற்காக பின்கதவால் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியா? என்பதிலும் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும்.

சிங்கள ஆட்சியாளர்கள் மீது முற்றுமுழுதாக வெறுப்படைந்து - விரக்தியடைந்து – அரச தலைவர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பதால் பயனெதுவும் ஏற்படப்போவதில்லை என்ற மனோநிலையே மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. எந்தவொரு பெரும்பான்மையின அரச தலைவர் வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட்டும் அவருக்கு வாக்களியுங்கள் என்று கோர முடியாத அளவுக்கு அனைத்து சிங்களக் கட்சிகள் மீதும் வேட்பாளர்கள் மீதும் தமிழ் மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள்.
 
இவ்வாறான நிலையில் - பிராந்திய வல்லரசினதும் அதனுடன் கூட்டிணைந்து தமது பூகோள நலன்களை முன்னிலைப்படுத்திச் செயற்படும் பன்னாட்டு வல்லரசுகளதும் நலன்களைப் பேணுவதற்காக - ஒத்திசைந்து செயற்படக்கூடிய வல்லரசுகள் விரும்பும் வேட்பாளர் ஒருவரை வெற்றிபெற வைப்பதனை இலக்காகக் கொண்டு, அந்த உண்மை நோக்கத்தை மக்களுக்கு மறைத்து, தமக்குத் தேவைப்படும் சிங்கள வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கைச் செலுத்த வைப்பதற்கான கபட முயற்சியையே 'தமிழ் பொது வேட்பாளர்' என்ற நாடகம் மூலம் அரங்கேற்ற முயல்கின்றார்கள். 

வரவிருக்கும் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளைப் பெறாமல் எவருமே வெல்லமுடியாத சூழலே உள்ளது. ஆனால், இப்படியான நிலையிருந்தும் எந்தவொரு அரச தலைவர் வேட்பாளரும் தமிழ் மக்களுக்காக எதுவுமே செய்யத் தயாரில்லை என்பதே களயாதார்தமாகும்.  தமிழ் மக்களுடைய வாக்கில்லாமல் எவருமே வெல்லமுடியாத ஒரு சூழலில் - தமிழ் மக்களின் வாக்குகளே 'யாரை வெல்லவைப்பது?, யாரைத் தோற்கடிப்பது?' என்றவொரு நிலை உள்ளபோது - தமிழ் மக்களைக் கணக்கில் எடுக்கவே தயாரில்லாத இந்தச் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பின் ஊடாக மட்டுமே மிகச்சிறந்த செய்தியை தமிழ் மக்களால் வழங்கமுடியும். 

சனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பும் விளைவுகளும் : 

அரச தலைவர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிப்பதன் மூலம் மூன்று விதமான செய்திகள் உணர்த்தப்படும். 

1.    இத் தேர்தல் மூலம் அரச தலைவராக வருபவர், தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்ததன் விளைவாகவே தன்னால் அரச தலைவராக வெற்றிபெற முடிந்தது என்ற நிலைமையையும் - தோற்றவர்கள், தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக நம்பிக்கையை கொடுத்திருந்தால் தங்களால் வென்றிருக்க முடியும் என்ற ஏக்கத்தையும் உருவாக்கும்.

2.    தேர்தலில் வென்றவருங்கூட, தமிழ்மக்களின் வாக்குகள் இன்றி எதிர்காலத்தில் தன்னால் வெற்றிபெறமுடியாமல் போகும் என்ற உண்மையை விளங்கிக் கொண்டு செயற்படவேண்டிய அச்சத்தையும் உருவாக்கும்.

3.    தமிழ் மக்கள் தமது வாக்குகளைத் தங்கள் இனநலன் சார்ந்தே இனிப் பயன்படுத்துவார்கள் என்பதும், இனியும் தமிழ் மக்களை வாக்களிக்கும் எடுபிடிகளாகப் பயன்படுத்த முடியாது என்ற காத்திரமான செய்தி பிராந்திய வல்லரசுக்கும் அதனுடன் இணைந்து செயற்படும் பூகோள ஆதிக்க சக்திகளுக்கும் அவர்களின் உள்ளூர் முகவர்களுக்கும் தெட்டத்தெளிவாக வழங்கப்படும்.

எனவே ஒற்றையாட்சி அரசமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசமைப்பு கொண்டுவரப்படல் வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் தமிழர் ஒற்றுமையாக நிறைவேற்றப்போகும் இந்த அரச தலைவர் தேர்தல் புறக்கணிப்பினூடாக அரசியல் ரீதியாகவும் இராஜதந்திரரீதியாகவும் ஏற்படுத்தப்படப்போகும் அழுத்தமானது தமிழினத்துக்கே மிகப் பெரிய பலத்தை வழங்கும் என்ற உண்மையை விளங்கிக் கொண்டு செயற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.  (அ)

128 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.