பூவே உனக்காக' எண்ட படத்தைக் கனபேர் பார்த்திருப்பியள். அதில விஜய் பற்றின உண்மையை அந்த ஊரில இருக்கிற ஒருத்தர் அறிஞ்சிடுவார். இந்தா போய் எல்லாருக்கும் சொல்லுறன்' எண்டு வெளிக்கிட்டவர் எதிர்பாராத விதமா ஒரு கத்தி கழுத்தில பாய்ஞ்சு. பேசவே முடியாமல் ஆஸ்பத்திரியில படுத்திடுவார். எண்டாலும் அப்பவும் உண்மையைச் சொல்ல ஆள் விதவிதமா 'ட்ரை' பண்ணுவார். ஆனால் அதுக்கெல்லாம் வேற அர்த்தம் சொல்லி, அவர் சொல்ல வந்த உண்மையைச் சொல்லவிடாமலே செய்துபோடுவினம். இப்பிடிப் படத்தில வந்தமாதிரி ஒரு காட்சி இப்ப உண்மையாவும் நடக்குதோ எண்டு கனபேருக்கு சந்தேகமா இருக்கு.
தமிழரசுக்கட்சியின்ர முந்தின தலைவர் சம்பந்தருக்கு இப்ப வயசு போன தால, முந்தினமாதிரி கதைக்க ஏலாமல் இருக்கிறார். அவர் என்ன சொல்லுறார் எண்டது அவரின்ர பிள்ளைகளே கனக்க கஷ்டப்பட்டுத்தான் கண்டுபிடிக்கினம். ஆனால் பொதுவேட்பாளர் வேண்டாமெண்டும். ஒஸ்லோ உடன்படிக்கையை ஏற்கிற வேட்பாளரைத் தான் ஆதரிக்கோணும் எண்டும் சம்பந்தர் சொன்னதாச் சிலர் பொதுவில சொல்லிக்கொண்டு திரியினம். ஆனால் சம்பந்தர் உண்மையாவே அப்பிடிச் சொன்னவர் தானா எண்டது அவருக்கு மட்டும்தான் வெளிச்சம்.
இப்ப என்னெண்டால், சம்பந்தர் சொன்னதால தான் தாங்கள் பொதுவேட்பாளரை எதிர்க்கிறமெண்டு ஒரு கோஷ்டி தமிழரசுக்கட்சிக்குள்ள வெளிக்கிட்டிருக்கு. முந்தநாள் வவுனியாவில நடந்த மத்திய குழுக்கூட்டத்தில, முக்கால்வாசி நேரம் இந்தப் பொதுவேட்பாளர் பற்றித்தான் ஓயாமல் கதைச்சும் ஒரு முடிவுக்கும் வராமல் வெளிக்கிட்டிருக்கினம். பொதுவேட்பாளர் விசயத்தை எதிர்க்கிறவை, என்னத்துக்காக பொது வேட்பாளரை வேண்டாமெண்டுகினம் எண்டதுக்கு ஒரு தர்க்கபூர்வ நியாயமும் சொல்லுகினம் இல்லையாம். அதோட பொதுவேட்பாளர் இல்லாட்டி ஆரை ஆதரிக்கிறது எண்டு கேட்டதுக்கும் அவையிட்ட மறுமொழி இல்லையாம். எப்பிடி கண்ணை மூடிக்கொண்டு மோட்டுத்தனமா சரத் பொன்சேகாவை ஆதரிச்சினமோ, எப்பிடி மைத்திரிக்கும் ரணிலுக்கும் முட்டுக் குடுத்தினமோ அப்பிடி இப்பவும் ஒரு பிளான் இல்லாமல் அவை இருக்கினம்.
தமிழரசின்ர இப்பத்தைய மத்தியகுழுவில் இருக்கிற கனபேர் பொதுவேட்பாளர் விசயத்தில எதிராத்தான் நிக்கினம். அப்பிடி பெரும்பான்மையான ஆக்கள் எதிரா நிண்டா, அதையே ஒரு முடிவா எடுக்கலாம் தானே. ஆனால் அங்கதான் இருக்குது சிக்கல். பொதுவேட்பாளரை ஏன் எதிர்க்கிறம்? எண்டது அவையில கனபேருக்குத் தெரியாது, அவையள் 'வைன்' குடுத்த பொம்மையள். சொன்னபடி ஆடத்தான் தெரியுமே தவிர. சொந்தமா யோசிக்க மாட்டினம். அதால, தாங்கள் பொதுவேட்பாளருக்கு எதிரா முடிவெடுக்க, சனம் வேறமாதிரி முடிவெடுத்தால் அவையின்ர அரசியல் கனவில மண்தான். அதாலதான், இந்த விசயத்தை எவ்வளவுக்கு முடிவெடுக்காமல் இழுக்க ஏலுமோ அவ்வளவுக்கு இழுபட வைக்கத்தான் அவை நினைப்பினம். பொதுவேட்பாளரை ஆதரிக்கிறதோ இல்லையோ எண்டுகூட முடிவெடுக்க ஏலாதவை தான். நாளைக்கு உரிமையை வாங்கித் தருவம் எண்டு வெட்டி விழுத் திற கதையளோட வாக்கு கேட்டு வருவினம். அப்ப இருக்கு கச்சேரி.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.