தென்னிந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் என அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். மாவட்ட மாநாட்டிலேயே அரசதலைவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது யாழ்.மாவட்ட இளைஞர் இளம்பெண்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அரச தலைவரிடம் நேரடியாக கலந்துரையாடுவதுக்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
மேலும் கருத்து தெரிவித்த அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
வலுசக்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் காற்றின் மூலமான மின்சார உற்பத்தியை செய்வதுக்கான சாத்தியங்களும் உள்ளன. அதனால் கிகாவோட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குளங்கள் மீது சூரிய சக்தி படலத்தை அமைத்து அதனூடாக மின்சாரம் தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம். இதற்காக பூநகரி மற்றும் இரணைமடு குளங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வடமாகாணமானது அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த இடங்களில் 700 மெகாவோட் திறன் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலத்தை நிறுவும் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம். இதனை ஆரம்பமாகக் கொண்டு ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வடக்கை மாற்ற முடியும். வலுசக்தி துறையின் முன்னேறிச் செல்ல அதிகளவில் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தை மையமாக கொண்டு முதலீட்டு வலயம் ஒன்று நிறுவப்பட உள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயமொன்றை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கிறோம். மீனவர்களுக்காக நமது கடற்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. நவீன மீன்பிடி முறைகள் மூலம் மீன்பிடித் தொழில் துறையும் பலப்படுத்தப்படும்.
மேலும், உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இன்னும் இரண்டு மாதங்களில் தென்னிந்திய கலைஞர்களை கொண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன் என அரசதலைவர் இதன்போது தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.