மட்டக்களப்பிலும், நல்லூரிலும் அனுஷ்டிக்க ஏற்பாடு
கிளிநொச்சியில் அடையாள உணவு தவிர்ப்பு
(ஆதவன்)
அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு நாளை மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி யில் நினைவேந்தல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்காக அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஈந்த அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியிலும், யாழ்ப்பாணத்தில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியிலும் நடைபெறவுள்ளது.
நாளை காலை 9.30 மணி முதல் 12 மணிவரை சமய அனுஷ்டானங்களுக்கு அமைய திதி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் நடைபெறும்.
மாலை 4 மணியளவில் கல்லடி, திருச் செந்தூர் ஆலயத்தில் இருந்து அன்னை பூபதியின் சமாதி நோக்கிய நடைபயணம் ஆரம்பமாகும். மாலை 5 மணியளவில் சமாதியடியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் நாளை வெள்ளிக்கிழமை அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டமும், நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்படவுள்ளது.
கிளிநொச்சி சேவைச் சந்தை முன்றிலில் காலை 8 மணிக்கு அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி, தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வும் நடைபெறும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளை அறிவித்துள்ளது.
இந்திய அமைதிப் படைக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்ற காலப்பகுதியில் அன்னை பூபதி இந்திய அரசாங்கத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கையை முன்வைத்து 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத்தவேண்டும். புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் என்ற இரு கோரிக்கைகள் அன்னை பூபதியால் முன்வைக்கப்பட்டிருந்தன.
நீர் மட்டும் அருந்தி உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்திய அன்னை பூபதி யின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.