புதியவன்
ஜி.வி.பிரகாஷ், இவானா, பாரதிராஜா, தீனா உட்பட பலர் நடித்துள்ள படம் 'கள்வன்'. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், டில்லி பாபு தயாரித்துள்ளார்.
பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷும், ரேவா பின்னணி இசையையும் அமைத்துள்ளனர். பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.
இவர், முண்டாசுப்பட்டி, ராட்சசன், மரகதநாணயம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். ஏப்ரல் 4 ஆம் திகதி வெளியாகும் இந்தப் படம் பற்றி பி.வி.சங்கர் தெரிவித்ததாவது:
'கள்வன்' மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் கதையை அடிப்படையாகக் கொண்ட படம். மலைக்கிராம மக்களின் வாழ்க்கை, வனவிலங்குகள் ஊருக்குள் வருவதால் ஏற்படும் பிரச்சினை என கதை போகும். ஹீரோ ஜி.வி. பிரகாஷ்குமார் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுபவராக நடிக்கிறார்.
அவர் தாத்தாவாக பாரதிராஜாவும் காதலியாக இவானாவும் நடித்துள்ளனர். நான் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு நன்றாகத் தெரிந்த அந்தப் பகுதியிலேயே படப்பிடிப்பு நடத்தினோம்.
யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக படத்தில் யாருக்கும் ஒப்பனை இல்லை. படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, படப்பிடிப்பு நடந்த அட்டனை என்ற மலைக்கிராமத்துக்கு வந்து அந்தப் பகுதியை நன்றாக அறிந்துகொண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்தார்.
படத்தில் யானைகள் தொடர்பான காட்சிகள் இருக்கின்றன. இதற்காக கேரளாவிலிருந்து பயிற்சி பெற்ற ஆறு யானைகளை அனுமதி பெற்று கொண்டு வந்தோம்.
யானைகளை வைத்து படமாக்குவது கடினமாக இருந்தது. இந்தப் படம் யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருக்கும். சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட அரிசிகொம்பன் யானையும் இந்தப் படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அனைத்துத் தரப்பினருக்கும் இந்தப் படம் பிடிக்கும். இவ்வாறு பி.வி.சங்கர் கூறினார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.