இமாலயப் பிரகடனம்: தமிழர் பேரவையின் இமாலய தந்திரம்.
இமாலயப் பிரகடனம்: தமிழர் பேரவையின் இமாலய தந்திரம்.

2009இல் யுத்தம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பரவியுள்ள ஈழத்தமிழர்கள் தமது அடையாளத்துடன், அதற்கு அடிப்படையாகக் காணப்படும் அரசியலை தழுவிக்கொள்கின்றமை அதிகரித்து வருகின்றது. வடக்கு கிழக்கைச் சேர்ந்த கில்மிஷா யாழிசை அண்மையில் தமிழ்நாட்டின் பிரபலத் தொலைக்காட்சி ஒன்றின் பாடல் போட்டித் தொடரில் வெற்றியீட்டினார், அத்துடன் நெட்ஃபிளிக்ஸில் வெற்றிகரமான நிகழ்ச்சி காரணமாக கனடாவைச் சேர்ந்த மைத்ரேயிராமகிருஷ்ணனின் பெயர் அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கப்படும் நாமமாக மாறியுள்ளது. ஈழத் தமிழர்கள் எவ்வாறு தமது அடையாளத்தின் உரிமத்துவத்தை எடுத்துக்கொண்டு தமிழர்கள் எதிர்கொள்ளும் அநீதியை சுட்டிக்காட்ட தமக்குரிய இயங்கு தளங்களை பயன்படுத்துகின்றனர் என்பதற்கான உதாரணங்களாக மேற்குறிப்பிட்ட இருவரும் காணப்படுகின்றனர்.

ஒரு போராட்டமாக முன்னெடுக்கப்படும் தமிழ் தேசியவாதம் எதிர்வுகூறத்தக்க எதிர்காலம் வரை செழிப்படைந்து தமிழர்களின் அரசியலில் தொடர்ச்சியான ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்க முடியும். தமிழ்த் தேசியவாதத்தின் பயணம் எல்லைகள் மற்றும் கண்டங்களைக் கடந்து சர்வதேச நிகழ்ச்சிநிரலுக்குள் இலங்கையை தொடர்ச்சியாக நிலைப்படுத்தி வருகின்றது, குறிப்பாக கொடூரக் குற்றங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றைச் சூழக் காணப்படும் விவகாரங்கள் தொடர்பாக இந்நிலைப்படுத்தல் அமைந்துள்ளது. ஜெனீவா, வொஷிங்டன், இலண்டன் மற்றும் புது டில்லி போன்ற பல இடங்களில் இடம்பெற்ற பல்வேறு மாநாடுகளில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாக இலங்கை கலந்துரையாடப்படுவதற்கு இது வழிவகுத்துள்ளது. இத்தொடர் செயன்முறைகளில் பங்குபற்றும் முக்கிய தரப்புகளில் ஒன்றாக தமிழ்த் தேசியவாதிகளும் அமைவது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் இந்த ஒன்று திரள்வு இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஒரு மோசமான நிலையை அடைவதற்கு வழிவகுத்தது – நற்பெயரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு அப்பால் சர்வதேச நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் நிலையும் தோன்றியுள்ளது. இலங்கை பல்வேறு வகைகளில் தொடர்ச்சியான நெருக்கடிகளை சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் அவ்வாறானதொரு சர்வதேச எதிர் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு அந்நாடு பாரிய விலையொன்றை செலுத்தும் நிலை ஏற்படும். இலங்கையில் நிலவும் முரண்பாட்டை சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக தீவிரமாக கருத்திற்கொள்ள தூண்டிய முக்கிய விடயங்களுள் ஒன்றாக தமிழ் தேசியவாத அரசியல் கொள்கையும் காணப்படுகின்றது. நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரல் அத்துடன் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிராகரித்தல் என்பவற்றில் வேரூன்றியதாக இக்கொள்கை அமைந்துள்ளது. 

இவ்வாறானதொரு அரசியல் சூழமைவில், 2023இன் ஆரம்பப் பகுதியில் நேபாளத்தின் பௌத்த மதகுருக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் உலகத் தமிழர் பேரவை (GTF) பங்கேற்றிருந்தது. அது இம்மாதம் இலங்கையில் அதிகம் பிரபல்யப்படுத்தப்பட்ட சுற்றுப்பயணம் ஒன்றாக அமைந்தது. இச்செயற்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்பட்ட பிரகடனம் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்ட புகைப்பட வடிவங்களில் உள்ளடக்கப்பட்டு சிவில் சமூகத்தின் பல்வேறுபட்ட உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்பட்டது. இம்முயற்சிகள் தேசியவாதக் கொள்கைகளில் உறுதியான கடப்பாடு கொண்ட அத்துடன் சிங்கள மேலாதிக்கத்தை தொடர்ச்சியாக மறுத்து வரும் பரந்த தமிழர் அரசியல் முன்னெடுப்புடன் இணைக்கப்படாதவனவாக அமைந்திருந்தன. இந்த இமாலயப் பிரகடனத்தில் எந்தவித உயர்வான விடயங்களும் காணப்படவில்லை. அது ஒரு வெற்று ஆவணமாகவே உள்ளது. ஒரு புறத்தில், இப்பிரகடனம் சிங்கள மேலாதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தவில்லை என்பதுடன் மறுபுறத்தில் யுத்தம் நிறைவுற்றதில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் அரசியலை தரம் தாழ்த்தியதை விட அதிக அளவுக்கு தரம் தாழ்த்தியுள்ளது. பொறுப்புக்கூறல் மற்றும் ஒரு அரசியல் தீர்வுக்கான சர்வதேச உந்துதலை நீர்த்துப் போகச் செய்யும் முனைப்பில் சில பெயரளவிலான செயற்பாட்டாளர்களுடனான ஈடுபாடுகளை தனது பக்க பங்களிப்பாக இலங்கை அரசாங்கம் காண்பிப்பதற்கே இந்த செயற்பாடு மீண்டும் ஒரு தடவை உதவப் போகின்றது. பாரிய கொடூரங்களை இழைத்தமைக்காக சர்வதேசம் கோரும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி என்பவற்றை புறந்தள்ளுவதற்கு அவ்விடயங்கள் நல்லிணக்கத்துக்கு பாதகமாக அமையும் என்பது அரசாங்கம் தொடர்ச்சியாகக் கையிலெடுக்கும் வாதமாகும். அரசியல் சீர்த்திருங்களை மேற்கொள்ளல் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றில் இருந்து அரசாங்கம் மேலும் பின்வாங்குவதற்கான ஒரு வாய்ப்பை உலகத் தமிழர் பேரவை அரசுக்கு வழங்கியுள்ளது.

முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணங்கள் தமிழர்களின் மனக்குறைகளின் நியாயத்தன்மை என்பன இலங்கைக்கு வெளியே மாற்றுக் கருத்துகளுக்கு அப்பாற்பட்டனவாக காணப்படுகின்றன. சுருக்காமாகக் கூறுவதாயின், 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்களவர்களை முன்னுரிமைப்படுத்தும் நாட்டின் உருவாக்கம் ஒன்றை பெரும்பான்மை சிங்கள சமூகம் முன்னெடுத்து வருகின்றது. இதன் போது, தமிழர்கள், மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற ஏனைய குழுக்கள் பாரபட்சங்களை எதிர்கொள்கின்றன. ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைத்துவம் தனது மக்களின் ஆதரவுடன் சிங்கள பௌத்த இனவாத நாட்டின் உறுதியான உருவாக்கத்தை தடுத்து வந்தது. இது ஈழத் தமிழர்கள் என்ற உறுதியான தேசிய மற்றும் அரசியல் அடையாளத்தை வளர்த்தெடுக்க உதவியதுடன் இவ்வடையாளத்தின் இருப்பு மாத்திரம் முனைப்புடன் உருவாக்கப்பட்டு வந்த சிங்கள பௌத்த இனவாதத்தின் மிகப்பெரிய தடையாக அமைந்தது. 1956ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம் தொடக்கம் கடந்த நவம்பர் மாதம் தமிழ் மாவீர்ர்களை நினைவு கூரும் தினத்தின் நிகழ்வுகளை பொலிசாரைக் கொண்டு தடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய ஆணை வரை, தமிழர்களை அடக்கியாள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இம்முனைப்புகள் வன்முறைகளுடன் இணைந்தனவாகக் காணப்படுவது வழமையாகும். “இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, அந்நாட்டுக்குள் சிறுபான்மையினர் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், அத்துடன் தேவையற்ற விடயங்களைக் கோரக் கூடாது” என்ற சரத் பொன்சேக்காவின் கூற்று இந்த மனப்பாங்கை சிறப்பாக பிரதிபலிக்கின்றது. இன்று வரை – மேலாதிக்கம் மற்றும் அதற்கான எதிர்ப்பு – என்ற இந்த நிலை இலங்கையில் காணப்படும் அடிப்படை முரண்பாடாக அமைந்துள்ளது. இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் சகவாழ்வு என்பவற்றை தொடர்ச்சியாக தடுத்து வரும் விடயமாக இதுவே அமைந்துள்ளது.

 இவ்விடயத்தை ஒரு பரந்த பார்வையில் நோக்கும் வேளை, தற்போதைய நிலைக்கு மூன்று எதிர்காலங்கள் காணப்படுகின்றன. ஒன்று, பல தேசிய இனங்கள் தமது ஒட்டு மொத்த அபிலாஷைகளை ஏனையோரின் உரிமைகளை பாதிக்காத வகையில் நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு பன்மைத்துவ தேசமாக இலங்கை வளர்ச்சியடைதல். சுதந்திரம் அடைந்தததில் இருந்து தமிழர்கள் அடைவதற்கு கனவு காணும் விருப்பத் தெரிவாக இதுவே அமைந்துள்ளது. 

இரண்டாவது; பாரிய கொடூரங்களுக்கு பொறுப்புக்கூறல் அத்துடன் அரசியல் தீர்வு இல்லாத, தற்போதைய நிலை தொடர்ந்து நிலவுதல். சிங்கள மேலாதிக்கம் அத்துடன் அதன் மீதான தமிழர்களின் எதிர்ப்பு தொடர்தல், அது பதட்ட நிலையை மேலும் அதிகரிப்பதுடன் ஸ்திரமற்ற நிலையை மேலும் அதிகரிக்கும்.

மூன்றாவது; சிங்கள பௌத்தத்தின் மேலாண்மை மற்றும் கொடூரக் குற்றங்களுக்கு இலங்கையை தண்டனைகளில் இருந்து விடுவித்தல் என்பவற்றை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு ஏதோ ஒரு வகையில் அமைந்த தீர்வை ஏற்றுக்கொள்ளல். இதன் மூலம் தமிழர்கள் சகித்துக்கொள்ளப்படுவதுடன் சிங்களப் பேரினவாதத்தின் நலன்களைப் பேணி நடந்து கொள்ளும் நிலை ஏற்படும். மேலும், பாரபட்சங்கள் தொடர்வதுடன் முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் போன்ற ஏனைய குழுக்கள் மீதான வன்முறைகளும் தொடர்கதையாகும். அனைத்து பிரதான சிங்கள தரப்புகளினதும் அங்கீகாரம் பெறப்பட்ட சிங்கள இலங்கை நாடு உருவாக்கத் திட்டம் தடையின்றி முன்கொண்டு செல்லப்படும்.

தற்போதைய நிலை நிலைத்திருக்க முடியாதது என்பதுடன் அது ஒரு கலகத்துக்கு வழிவகுக்கும் என்பதை மிகவும் நியாயத்தன்மை கொண்ட மக்கள் புரிந்துகொள்வர். எனினும், தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொள்ளும் வேளை, இந்நிலை நீடிக்கும் சாத்தியமே காணப்படுகின்றது. மேற்குறிப்பிடப்பட்ட நிலைகளில் முதலாவதுதெரிவு நாட்டில் உள்ள அனைவருக்குமே நன்மையானது என்பதால் அதற்கு முயற்சிப்பதே சிறந்தது என்பதை அனைவராலும் உணர முடியும். எனினும் சர்வதேச சமூகத்தின் சிறு பகுதியும் உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் போன்ற சில தமிழ் தரப்புகள் மூன்றாவது தெரிவே மிகவும் “யதார்த்தமான” தெரிவு என சில காலத்தின் பின்னர் அது முதலாவது தெரிவுக்கு ஒத்ததாக மாற்றமடையும் என்ற எதிர்பார்ப்புடன் பரப்புரை செய்து வருகின்றனர். எனினும், தமிழர்கள் சிங்கள பௌத்த மேலாண்மையை ஏற்றுக்கொள்ளல், இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற நிலையை விரும்பி ஏற்றுக்கொள்ளல் அத்துடன் 1983 அல்லது 2009 இல் தாம் எதிர்கொண்ட அவலங்களை விட தற்போதைய நிலை ஒன்றும் மோசமானது அல்ல என்ற நன்றியுணர்வுடன் இழைக்கப்பட்ட கொடூரங்களை மறந்து விடல் என்பன தெரிவு மூன்றின் தேவைப்பாடாக உள்ளது. தமிழ் மக்களின் பெரும் பகுதியினருக்கு, குறிப்பாக தென்னிலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, பெரும்பான்மையினரின் விருப்பங்களுக்கு ஏற்ப தமது வாழ்வை மாற்றிமைத்தவர்களுக்கு அவர்களின் தற்போதைய இருப்பு ஒரு யதார்த்தமாக ஏற்கனவே மாறி விட்டது. வடக்கு கிழக்கில் இடம்பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அத்துடன் நினைவேந்தல்களை அடக்கும் அரசின் ஒடுக்குமுறைக்கு அப்பிரதேசங்களில் ஓரளவு எதிர்ப்பு காணப்பட்டாலும், அரசுக்கு விருப்பமற்ற விடயங்களை தவிர்ப்பது சிறந்தது என்ற கருத்து தமிழர் தாயகத்துக்கு வெளியே வசிப்பவர்களிடையே வலுப்பெற்று வருகின்றது. தெற்கில் வாழும் ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை அவர்கள் தெற்கை தமது தாயகமாக எண்ணுவதில்லை, எனவே அங்கு அரசை எதிர்க்கும் அபாயத்தை அவர்கள் தவிர்க்க முனைகின்றனர். 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தின் போது கொழும்பில் இருந்த தமிழர்களின் பெரும்பான்மையான வர்த்தகங்கள் இலக்கு வைத்து தகர்க்கப்பட்டமை, கொழும்பில் தமது வர்த்தகங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அவர்கள் சிறிய மட்டத்திலாவது வடக்கு கிழக்குக்கு வெளியே இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற அந்தஸ்த்தை சகிக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. ஈழத்தமிழர்கள் இலங்கை அரசுடன் துஷ்பிரயோகம் மிக்க உறவுடனேயே தமது வாழ்வைக் கொண்டு செல்லுகின்றனர், இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கான நீதி மற்றும் இலங்கையை மீள்கட்டமைப்பாக்கம் செய்தல் என்பனவே அவர்களுக்கு தேவையான நிவாரணமாகவுள்ளது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் தமிழர்களின் தேசியம் வன்முறையாக சிதைக்கப்பட்ட இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசியவாதமே சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்ல காணப்படும் தடைக்கல்லாகும்.

ஒரு உரையாடலை நடத்துவது பிரச்சினைக்குரிய விடயம் அல்ல என்பது தெளிவான விடயமாகும். அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், அத்துடன் அனைத்து மதங்களின் மத குருக்கள் போன்ற பல்வேறுபட்ட தரப்புகளுடன் உரையாடல்கள் இடம்பெற வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. எனினும், உரையாடல்கள் அர்த்தபூர்வமானவையாக இருக்க வேண்டும், வெறுமனே ஒத்து ஊதுபவையாக அவை அமைந்திருக்கக் கூடாது. அடுத்தடுத்த வந்த அரசாங்கங்கள் 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள் உள்ளடங்கலாக அர்த்தபூர்வமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான தமது விருப்பற்ற நிலையை மூடி மறைக்க பௌத்த மத குருக்களின் பிடிவாதத்தை ஒரு சாக்காக பொதுவெளியில் அரங்கேற்றி வந்துள்ளன. சிங்கள தேசியவாத அரசியலே பௌத்த மதகுருக்களை இந்த நிலைக்கு உயர்த்தியது. தமிழர்களின் கோரிக்கை உள்ளடங்கலாக சிங்கள பௌத்த மேலாதிக்கம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களில் இருந்து மீள்வதற்காக களமிறக்கப்படும் வசதியான கருவியாக பௌத்த மத குருக்கள் காணப்படுகின்றனர். மேலும், இந்தியா மற்றும் தமிழ்நாடு என்பவற்றுடனான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இணைப்பு என்பவற்றை அடைந்துகொள்ளவும் அவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இம்மதகுருக்கள் அடிப்படையில் அரசியல்மயப்படுத்தப்பட்டு சிங்கள அரசியல்வாதிகளின் நலன்களுக்காக வசதிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். எனவே, இலங்கை அரசாங்கத்தின் அரசியல் விருப்பு அற்ற நிலையில் இவ்வாறான முன்னெடுப்புகள் வெறும் கண் துடைப்பாகவே அமையும். இதுவே உலகத் தமிழர் பேரவை மேற்கொண்ட முயற்சிகளின் மையமாக அமைந்துள்ளது. ஆகக் குறைந்த தீர்வாக அமையும் கொடூரங்களுக்கான பொறுப்புக்கூறல் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்ற அளவுக்கு விடயங்களை தரம் தாழ்த்தும் இவ்வகையான நடவடிக்கைகள் இலங்கையில் மாற்றங்கள் நிகழும் என்பதற்கான சாத்தியங்களுக்குகுந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. மேலும், இவ்வகை நடவடிக்கைகள் இனவாத அரசாங்கம் ஒன்றின் தோற்றத்துக்கு வழிகோலும். கொடூரக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களாக தீவிரமாக குற்றம் சாட்டப்படும் மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க போன்றோருடன் இணைந்து தோற்றமளிப்பதன் மூலம், யுத்தத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு உலகத் தமிழர் பேரவை குந்தகம் விளைவிக்கின்றது. சிங்கள மேலாதிக்கத்துக்கு ஒரு பலமான அச்சுறுத்தலாக தமிழர்கள் காணப்படுகின்றனர் என்பதை நன்கு அறிந்த சிங்கள அரசியல்வாதிகள் சர்வதேச சமூகத்தில் தமிழர்கள் மேற்கொள்ளும் ஆதரித்து வாதிடல்களை நீர்க்கச் செய்வதற்கு உலகத் தமிழர் பேரவையின் முயற்சிகள் உதவுகின்றன என்பதை இலகுவாக புரிந்து கொண்டு அவ்வமைப்புடன் புகைப்படங்களில் தோன்றுவதில் மகிழ்ச்சியடைவர். 2015ஆம் ஆண்டின் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை என்பன கொண்டிருந்த ஈடுபாட்டைப் போன்று, சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை புறந்தள்ளுவதற்கான உந்துசக்தியை இவ்வகையான பிரகடணங்கள் இலங்கை அரசுக்கு வழங்குகின்றன. ஒரு சமாந்தரமான நல்லிணக்க முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம் என்ற கட்டுக்கதையை சர்வதேசத்துக்கு கூறுவதற்கு இது வாய்ப்பு வழங்குகின்றது. எனினும், இவ்வகையான வாதங்களை எவ்வாறு கையாள்வது என்பதை நன்கு அறிந்த திறமை வாய்ந்த மற்றும் பேச்சாற்றல் மிக்க செயற்பாட்டாளர்களும் தமிழர் தரப்பில் நிறைந்துள்ளனர். வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் சமூகம் என்பவற்றில் உள்ள பல்வகைத்தன்மை கொண்ட செயற்பாட்டாளர்கள் இந்த முயற்சிகளை நிராகரித்துள்ளமை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 

இவ்வகையான ஈடுபாடுகள் ஒன்றும் புதியன அல்ல. இந்த உரையாடல்களில் பங்கேற்றோர் மற்றும் பின்புலத்தில் இருந்து கொண்டு இம்முயற்சிகளை உற்சாகமாகக் கொண்டாடும் இதே நபர்கள் மற்றும் நாடுகளே முட்டாள்தனமான எதிர்பார்ப்புடன் ரணில்-சிறிசேன நல்லாட்சி இயக்கத்தையும் முன்னிலைப்படுத்தி இருந்தனர். இலங்கையின் வரலாறு முழுவதும் தமிழ் உயர் குடிகள் தொடர்ச்சியாக தமிழர் கொள்கைககளைக் கைவிட்டு அதற்கு உபகாரமாக பெரும்பான்மை அரசாங்கங்களிடம் இருந்து சலுகைகளை பெற்று வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தவர்கள். இவ்வகையான உயர்குடி செயற்பாட்டாளர்கள் தமது செல்லுபடித்தன்மை மற்றும் அந்தஸ்த்தை நிலைநிறுத்த பாடுபடுபவர்கள். அவர்கள் எந்த அளவுக்கு அரசியல் நிலையை தாழ்த்துகின்றனரோ அந்த அளவுக்கு அமெரிக்கா போன்ற சர்வதேச சக்திகள் மற்றும் இலங்கைக்குள் உள்ள தரப்புகளிடம் இருந்து அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறுகின்றனர். யுத்தக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க போன்றோருடன் புகைப்படங்களில் தோன்றுவது அவர்களின் பார்வையில் கௌரவத்தின் அடையாளம் மற்றும் அவர்களின் முக்கியத்துவத்துக்கான அங்கீகாரம். எனினும், தமிழர்கள் தமது கோரிக்கைகளை தாழ்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இலங்கை அரசாங்கம் அதனை மேலும் தாழ்த்துவதே இங்குள்ள பிரச்சினையாகும். தமிழர்கள் தனி நாடு கோரிய போது, அரசாங்கம் பெடரல் தீர்வு வேண்டும் எனக் கூறியது. தமிழர்கள் பெடரல் தீர்வைக் கோரிய போது, 13 ஆம் திருத்தத்தின் மட்டுப்படுத்தப்பட்ட மாகாண அதிகாரப் பகிர்வுக்கு அப்பால் செல்ல மாட்டோம் என அரசாங்கம் கூறியது. தற்போது, ஒரு சில தமிழ் தரப்புகள் 13ஆம் திருத்தத்தின் முழுமையான அமுல்படுத்தலை கோரும் வேளை, அரசாங்கம் “13இலும் குறைவான” என்ற ஒரு நலிவான அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகின்றது.

உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (அத்துடன் சில சர்வதேச சமூக உறுப்பினர்கள்) குறைந்த எதிர்ப்பு மிக்க வழியை விரும்புவது புலப்பட்ட போதும், அடிபணிவதை தமிழர்கள் விருப்புடன் தெரிவு செய்வர் என எண்ணுவது மனச்சாட்சியற்ற எதிர்பார்ப்பாகும். பன்மைத்துவம் மிக்க இலங்கை என்பது சாத்தியமான விடயமாகும். எனினும், தமிழர்களின் அரசியல் சக்தியை தழுவி அதனை பிரயோகிப்பதற்கான விருப்பு மற்றும் தொலைநோக்கு உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திடம் இல்லை என்பதே இங்குள்ள பிரச்சினையாகும். ஏனெனில், அதற்காக இலங்கைக்குள் எழும் எதிர்ப்புகள் மாத்திரமன்றி கடந்த பல வருடங்களாக இலங்கையை ஒரு “முகாமைத்துவம் செய்யக்கூடிய பிரச்சினை” என ஏற்றுக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் பிரிவுகளின் எதிர்ப்பினையும் முறியடிக்க வேண்டும். 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் சதி முயற்சி உள்ளடங்கலாக நல்லாட்சி கூட்டணி அரசின் அனைத்து நகர்வுகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் மூலம் தெளிவாக எடுத்துக்காட்டியது. ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காகாகவே நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படுகின்றது எனக் காரணம் கற்பிக்கப்பட்ட போதும், ஒரு வருடத்தின் பின்னர் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர்.

சுருக்கமாகக் கூறுவதாயின், இந்த இமாலயப் பிரகடனத்தில் இமாலய விடயங்கள் எவையும் இல்லை. இது நல்லாட்சி அரசாங்கத்துடனா ஈடுபாடு மற்றும் சில தமிழ் உயர் குடிகள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு சவாலாகாத வகையில் தமது கோரிக்கைகளை தாழ்த்துவதன் மூலம் புன்னகை புரியும் பௌத்த மதகுருமார் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் இலகுவாக புகைப்படங்களுக்கு காட்சியளிக்க வைக்க உதவிய ஒரு முயற்சி மட்டுமேயாகும். பெரும்பான்மையான தமிழ்செயற்பாட்டாளர்கள் மற்றும் தமக்கு முன் அரசியலை முன்னெடுத்த பல தலைமுறைகளைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்களை விட உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன முட்டாள்தனமாக நம்புகின்றன. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் மற்றும் உலகத் தமிழர் பேரவை அமைப்பின் பேச்சாளர் ஆகியோர் இதனை முன்னொரு போதும் இல்லாத முன்னெடுப்பு எனக் குறிப்பிடுகின்றனர். “இதனை நாம் பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்டிருக்க வேண்டும்” அத்துடன் “உங்களை விட நாம் பல வருடங்கள் பின் தங்கியுள்ளோம்” என்று கூட இரா. சம்பந்தன் கூறுகின்றார். இக்கூற்றுக்கள் முற்று முழுதாக பிழையானவையாகவும் தமிழர்கள் பல வருடங்களாக பேச்சுவார்த்தைகளில் மேற்கொண்ட முயற்சிகளை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது. யுத்த நிறுத்த காலத்தில் திரு. சம்பந்தன் மதகுருக்களை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தமையினை மறந்திருக்கக் கூடும். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் முதல்பண்டா-செல்வா ஒப்பந்தம் வரை, யுத்த நிறுத்தம் முதல் நல்லாட்சி அரசுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவு வரை, தமிழர்களின் எதிர்ப்புப்பாதையில் இவ்வாறான முன்னெடுப்புகள் குப்பைகளாக சிதறிக் காணப்படுகின்றன. அவை அனைத்தும் இதனை விட முக்கியத்துவம் கொண்டன. தமிழர்களின் பல தசாப்த கால அமைதியான முயற்சிகள் தெற்கினால் உரிய வகையில் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். 1948ஆம் ஆண்டு தொடக்கம், தமிழர்களை விட்டு விட்டு தமக்கிடையே காணப்படும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணங்களை தீர்ப்பதற்கு இதயசுத்தி மிக்க உரையாடலில் ஈடுபடும் அரசியல் விருப்பற்றதாகவே சிங்கள பெரும்பான்மை காணப்பட்டது. இதுவே இலங்கையில் சமாதானத்துக்கான பாரிய தடையாகக் காணப்படுகின்றது. இந்த பிரகடனத்தின் வெறுமையும் இதனையே பறைசாற்றி நிற்கின்றது. இந்த எலி வலையை மலையளவுக்கு பெரிதாக்குவதை தவிர்ப்போம்.

கட்டுரையாளர்:- மரியோ அருள்தாஸ்

article

483 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.