இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போர்டர் - காவஸ்கர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 4ஆவதும் இறுதியுமான போட்டி அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் இன்று (09) ஆரம்பமாகிறது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடுவதற்கு தகுதிபெறவேண்டுமானால் இன்றைய போட்டியில் இந்தியா வெற்றிபெற்றே ஆகவேண்டும். எனவே இந்தப் போட்டி இந்தியாவுக்கு மிக முக்கிய போட்டியாக அமையவுள்ளது.
இந்தத் தொடரில் தற்போது 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்தியா, தொடரை வெற்றிகொள்ளும் உத்வேகத்துடன் விளையாடவுள்ளது.
நாக்பூரில் நடைபெற்ற 1ஆவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்களாலும் டெல்லியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களாலும் இந்தியா வெற்றிபெற்றிருந்தது.
இந்தூரில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது. அந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுக்கொண்டது.
இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால் அதன் இறுதிப் போட்டி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். எனினும் இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை முழுமையாக வெற்றிபெறத் தவறினால் இந்தியா இறுதிப் போட்டி வாய்ப்பை பெற்றுவிடும்.
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் 3 போட்டிகளும் 3 நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது விசேட அம்சமாகும். இந்த 3 போட்டிகளிலும் சுழல்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி இருந்தனர். அதேவேளை, 3ஆவது போட்டி நடைபெற்ற இந்தூர் ஆடுகளம் மோசமானது என ஐசிசி முத்திரை குத்தி 3 தகுதிநீக்க புள்ளிகளையும் விதித்தது.
இந் நிலையில் அஹமதாபாத் ஆடுகளும் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் சமநிலை பேணுமா அல்லது இந்தப் போட்டியிலும் சுழல்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி 3 நாட்களுக்குள் ஆட்டம் முடிவுக்கு வருமா என்பதை இன்றைய போட்டி ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
இதேவேளை தனது பாட்டி சுகவீனமுற்றிருப்பதால் அவுஸ்திரேலியா திரும்பிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் இந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக 3ஆவது டெஸ்டில் அணியை வெற்றிக்கு வழி நடத்திய ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்தும் அணித் தலைவராக செயற்படவுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.