(புதியவன்)
ஒரு பக்கம் பாலத்தீனத்திலேயே வாழ்வது போன்ற துயரமும் துடிப்புமான மனநிலை. மறு பக்கம் 2024 பற்றிய கவலை. இன்னும் சில மாதங்களில் (நூறே நாள்!) நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் வழக்கமாக வந்து போகும் நிகழ்வன்று. நரேந்திர மோடி தலைமையிலான பாசிச பாசக ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது குறித்துத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்திலும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியிலும் விரிவாக விவாதித்துள்ளோம்.
பாசிச எதிர்ப்பு முன்னணியில் இது வரை ஒருமனதான முடிவுக்கு வர இயலவில்லை. ததேவிஇ-ஐப் பொறுத்த வரை மாறுபட்ட கருத்துகளிடையே காத்திரமான விவாதம் நடத்தினோம். தேர்தலில் பாசக கூட்டணியைத் தோற்கடிக்கப் பொருத்தமான உத்தி என்ன? பாசக கூட்டணியைத் தோற்கடிக்க வல்ல கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று மட்டும் மக்களிடம் பரப்புரை செய்வதா? அல்லது வெல்லுந்திறமுள்ள கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிதான் என்ற கணிப்பின் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்பதா? பாசக கூட்டணியைத் தோற்கடிக்க திமுக கூட்டணியை ஆதரிப்பது என்ற கருத்தைப் பொதுக் கருத்தாக அடைந்தோம். ஆனால் இரண்டு நிலைப்பாடுகளும் விளைவளவில் ஒன்றுதான் என்ற அளவில் இரண்டில் எதை வலியுறுத்துகிறவர்களோடும் இணைந்து செயல்பட முடியும் என நம்புகிறோம்.
2024 பொதுத் தேர்தலில் பாசக கூட்டணிக்கு எதிராக வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியை ஆதரிப்பது என்ற உத்தியின் அடிப்படையில்தான் “தமிழ்நாடு பொதுமேடை–2024” என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. தோழர் அரி பரந்தாமன் பொதுமேடையின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். ஒருங்கிணைப்புக் குழுவில் நானும் ஓர் உறுப்பினர்.
2014இல் நரேந்திர மோடி முதன் முதலாக ஆட்சிக்கு வரும் போது கொடுத்த உறுதிமொழிகளில் முதன்மையானது வேலையின்மையைப் போக்குவதுதான். அவரது வெற்றிக்கு வழிசெய்த முதன்மைப் பொருளியல் காரணி வேலையின்மைதான் என நம்புகிறேன். இதே உறுதிமொழியை மீண்டும் இம்முறையும் மோடி உத்தரவாதம் (?) என்ற பெயரில் முன்வைக்கும் எனத் தெரிகிறது.
எனவே நமது பரப்புரை வேலையின்மைச் சிக்கலைத் தெளிவாக எழுப்ப வேண்டிய தேவை இருப்பதாக நினைக்கிறேன். நம் தோழர்களையும் நண்பர்களையும் இந்தப் பரப்புரைக்கு அணியமாக்க வேண்டும் எனக் கருதிதான் சென்ற முறை அரசியல் வகுப்பில் வேலையின்மை குறித்துப் பேசினோம். அதன் தொடர்ச்சியாக அடுத்த வகுப்பில் “வேலையின்மை – சாதி, பாலினம்” என்பது குறித்துப் பேசுவோம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.